Tuesday, January 15, 2008

க‌ண்ணாடியில் ந‌க‌ரும் வெயில்-வெளியீடு


உயிர்மை வெளியீடாக பொங்கல் தினத்தன்று வா.மணிகண்டனின் "கண்ணாடியில் நகரும் வெயில்" கவிதைத் தொகுதி புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

ஜ‌ன‌வ‌ரி 15,2008 மாலை ஐந்து ம‌ணிய‌ள‌வில் உயிர்மை அரங்கில் ந‌டைபெற்ற‌ இந்நிக‌ழ்வில் எழுத்தாள‌ர் சுஜாதா புத்த‌க‌த்தை வெளியிட, ரோகிணி பெற்றுக் கொண்டார்.

ம‌னுஷ்ய‌ புத்திர‌ன் முன்னிலை வ‌கிக்க, திர‌ளான‌ வாச‌க‌ர்க‌ள் ப‌ங்கெடுத்த‌னர்.

Monday, January 14, 2008

ஜீ.செளந்தரராஜனின் கதை-நாவல்

வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகளும் லட்சியங்களும் கனவுகளும் தனிமனிதனிடம் வந்தடையும்போது அவற்றிற்கு எதிரான வாழ்வைத்தான் வாழவேண்டியதாக இருக்கிறது.

ஒருவரது வாழ்வில் நிழலைப்போலத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் இயல்பானவையும் இயலாமையும் ஜீ.செளந்தரராஜனின் கதையில் முழுக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது நிழலகளை மறைத்துக் கொண்டுதான் ஜீ.செளந்தரராஜனின் கதையின் கதாபாத்திரங்கள் வீதிகளிலும், வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ந‌வீன‌ க‌விதை,சிறுக‌தைக‌ளில் த‌ன் இருப்பினை தொடர்ந்து உறுதிப்ப‌டுத்திக் கொண்டேயிருக்கும் எஸ்.செந்தில்குமாரின் இந்த‌ நாவ‌லும் மிக‌ முக்கிய‌மான‌து.

Saturday, January 12, 2008

பார்வை 360 சுஜாதாவின் திரையுலக அனுபவங்கள்

சுஜாதா எழுத்தாளராக திரையுலகில் எதிர்கொண்ட அனுபவங்கள், சம்பவங்களை விவரிக்கிறது இந்த நூல். இலக்கியம் சினிமாவாகும்போது நிகழும் விசித்திரங்கள், புகழ்பெற்ற சினிமா கலைஞர்களுடன் பணியாற்றிய நினைவுகள், தமிழ் சினிமா உலகின் எதார்த்தமான பின்புலங்கள் குறித்த இந்த நூல் கனவுத் தொழிற்சாலையின் இன்னொரு பக்கத்தை சுவாரசியமாக விவரிக்கிறது.

எம்.ஆர்.ராதா-காலத்தின் கலைஞன்


எம்.ஆர்.ராதா நூற்றாண்டை முன்னிட்டு வெளிவரும் இந்நூல் நம் காலத்தின் மாபெரும் எதிர்க்குரலாக விளங்கிய கலைஞனின் பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்துகிறது. திராவிட இயக்கத்தின் அரசியல் பண்பாட்டு கருத்தியல்களை தனது மேடை நாடகங்கள் மற்றும் சினிமா மூலம் தீவிரமாக கொண்டு சென்ற எம்.ஆர்.ராதாவின் ஆளுமை பழமையையும் அறியாமையையும் எதிர்த்து நவீனத்துவத்தின் கலக‌ சக்தியாக வெளிப்பட்டது.


மணாவின் இந்த நூல் எம்.ஆர்.ராதாவின் வாழ்வையும் கலையையும் ஆதாரபூர்வ‌மான தகவல்கள்,அரிய புகைப்படங்கள்,ராதாவிற்கு நெருக்கமானவர்களின் நேர்காணல்கள் என அவரது பயணத்தின் ஏற்ற இறக்கங்களை விரிந்த பார்வையுடன் முன் வைக்கிறது.

Thursday, January 10, 2008

மரம்‍-‍ ஜீ.முருகன்


ஆண்‍ பெண் உறவுகள் குறித்த கலாச்சாரப் புனைவுகளையும் கவித்துவ பாசாங்குகளையும் தொடர்ந்து கலைப்பவை ஜீ.முருகனின் கதைகள். இந்த உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள், பாவனைகள், பிறழ்வுகள், பயங்கள், மீறல்கள் வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழியில் வரைகிறது மரம்.

மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடியதல்ல என்பதை இந்த நாவலின் பாத்திரங்கள் நிரூபணம் செய்கின்றன.

க‌ள்ளி‍-நாவ‌ல்


வா.மு.கோமுவின் எழுத்துக்கள் குதூகலமும் துணிச்சலும் கொண்ட மொழியால் வாழ்வை எதிர்கொள்பவை. அவரது முதல் நாவலான கள்ளியில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வும் மதீப்பீடுகளும் கனவுகளும் வெகு இயல்பாக தோற்றம் கொள்கின்றன.மத்தியதர கலாச்சார மதீப்பீடுகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியினையும் கடந்து, வா.மு.கோமு தமிழ் வாழ்வின் அறியப்படாத யதார்த்தம் ஒன்றினை இந்நாவலில் சித்தரிக்கிறார்.இந்த ய‌தார்த்தம் சிலநேரம் அதிர்ச்சி அளிப்பது.சில நேரம் நம் அந்தரங்க முகத்தை திறந்து காட்டுவது;

ஒருபோதும் நாசூக்குகளின் வழியே எதையும் மூடி மறைக்காதது.

Wednesday, January 9, 2008

எப்போதும் இருக்கும் கதை.

எஸ்.ராமகிருஷ்ணனின் நேர்காணல்கள்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இலக்கிய இதழ்களில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணனி நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடர் உரையாடலின் வழியே தனது படைப்புலகம் குறித்தும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான தனது அவதானிப்புகள் மற்றும் விமர்சனங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்த நேர்காணல்கள் படைப்பாளியின் தனிப்பட்ட பார்வைகள் என்பதைத் தாண்டி புனைகதை குறித்த ஆழ்ந்த விசாரணையை முன்வைக்கின்றன.

புதியதொரு கதையியலை நோக்கி வாசகனை அழைத்துச் செல்லும் முனைப்பும் இலக்கியத்தின் பரந்த வாசிப்பு அனுபவமும் முழுமையாக வெளிப்படுகின்றன என்பதே இந்த நேர்காணலின் சிறப்பம்சம்.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது